Friday, 5 November 2021

வெளிநாட்டில் தீபாவளி

                                                            வெளிநாட்டில் தீபாவளி
பண்டிகை வருதுனு தெரிஞ்சாலே மனசுல ஒரு புத்துணர்ச்சியும், கொண்டாட்டமும் தானாகவே வந்துடும்.
எப்போ போய் புது துணி வாங்கலாம். என்னென்ன கலெக்‌ஷன் வந்திருக்குனு பண்டிகை வர்றதுக்கு முன்னாடியே ப்ளான் பண்ணி செய்றதெல்லாம் ஒரு தனி குஷி.
எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி ஷாப்பிங்க்கிற்குனே இரண்டு நாள் லீவு போட்டு, எல்லாம் வாங்கி பண்டிகை வரவரைக்கும் தினம் எடுத்து எடுத்து பார்த்து வைக்கிறதுக்கு மனசு ஒரு குழந்தையாவே மாறிடும்.
அம்மா தீபாவளிக்கு என்ன பலகாரம் பண்ண போற, அதுக்கு நான் என்ன உதவி செய்யணும். பண்றதும் பண்ற நல்லா ஒரு வாரத்துக்கு இருக்கிற மாதிரி பண்ணுணு சொல்லும் போது அம்மா முறைக்கிறதும் ஒரு சின்ன கிண்டல் தான.
அப்பாவிற்கு என்ன தலைப்பு என்ன பட்டிமண்றத்துல , என்ன நல்ல நிகழ்ச்சி போட்றான் டிவீல னு சேனல் மாத்த மாத்த அப்பப்பப்பா ரிமோட்டுக்கு கண் இருந்தா அழுதே தீர்த்துடும்.
அண்ணணுக்கோ முதல் நாள் முதல் ஷோவிற்கு டிக்கெட் எப்படியாவது வாங்கிடணும். அப்படி கிடைச்சிட்டா அன்னிக்குலேர்ந்தே எனக்கு தீபாவளி தான். அவனோட குதூகலத்த பாக்கும் போது நானே படம் பாக்க போற மாதிரி ஒரு படபடப்பு, ஒரு ஆர்வம் இருக்கும்.
பண்டிகை அன்னிக்கு வெளியே கிளம்பி, சொந்தகாரங்க வீட்டிற்கு போகறதும், தாத்தா பாட்டி வீட்டில் மதியம் எல்லாரும் சிரிச்சு பேசி உட்கார்ந்து சாப்பிடறதும் நினைச்சு பார்க்கும் போது, ஏன் அந்த காலம் மாறிடுச்சு. அப்படியே இருந்துட கூடாதானு தோணும்.
பண்டிகையிலேயே ஒரு ஸ்பெஷலான பண்டிகை தீபாவளி. ஊருலிருந்தா புது துணி போட்டு, இரவு நேரம் போல வான வேடிக்கையை பார்த்து, யாரு வீட்டில் குப்பை அதிகமாயிருக்குனு அடுத்த நாள் கணக்கு போட்டு இருப்போமே னு நினைச்சிக்கிட்டு ஒரு நாலு சுவருக்குள்ள எல்லாருக்கும் கால் பண்ணி தீபாவளி
வாழ்த்துக்கள்
சொல்லி, வெளியே போய் வெறிச்சோடி இருக்கிற வானத்தை பார்த்து தீபாவளியை கழிக்கும் எத்தனையோ நண்பருக்கும், நண்பிக்கும் இப்பதிவை சமர்பிக்கிறேன்.
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள்
.